வருமான வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும்
வட்டி விதிக்கப்படாமல் இருக்க, வருமான வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஆணையர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில், வருமானவரித்துறை சார்பில், வருமானவரியை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் (திண்டுக்கல்-மதுரை) மைக்கேல் ஜெரால்டு தலைமை தாங்கி பேசினார். அப்போது, 2023-2024-ம் ஆண்டுக்கான வருமான வரியை தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் 4 பிரிவுகளாக முன்கூட்டியே செலுத்தலாம். அதாவது மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 15-ந்தேதி செலுத்தலாம்.
கடந்த ஆண்டு நிறுவனத்தின் வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்றபடி 2023-2024-ம் ஆண்டுக்கான வருமான வரியை செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தாத பட்சத்தில் வருமானவரித்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் வட்டி தொழில் நிறுவனங்கள், வணிகர்களுக்கு விதிக்கப்படும். முன்கூட்டியே வருமானவரியை செலுத்திவிட்டால் இந்த வட்டியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். கூட்டத்தில் திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரி செல்வராணி, உதவி ஆணையர் கலைச்செல்வி மற்றும் ஆடிட்டர்கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.