நடிகர் விஜய்க்கு ரூ.1½ கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் விஜய்க்கு ரூ.1½ கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு
x

‘புலி’ படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக வாங்கிய ரூ.15 கோடியை வருமானத்தில் காட்டாத நடிகர் விஜய்க்கு ரூ.1½ கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வருமான வரி சோதனை நடந்தது. அப்போது, முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்தநிலையில் கடந்த 2016-2017-ம் நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அதில் தன் வருமானத்தை ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால், 2015-ம் ஆண்டு நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், புலி படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் ரூ.15 கோடியை ரொக்கமாக பெற்றதாகவும், அதை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் தெரியவந்தது.

ரூ.1½ கோடி அபராதம்

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதில், புலி படத்துக்காக பெறப்பட்ட ரூ.15 கோடிக்கு வரி செலுத்தவில்லை. வருமான கணக்கிலும் குறிப்பிடவில்லை. அதனால், ரூ.1½ கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்,

அந்த மனுவில், 'அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால் 2019-ம் ஆண்டே இந்த அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு பின்னர் அபராதம் விதித்துள்ளதால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தடை

இந்த மனுவை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். பின்னர், நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற செப்டம்பர் 16-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story