கொரோனா பரவல் அதிகரிப்பு: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் கட்டாயம்


கொரோனா பரவல் அதிகரிப்பு: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் கட்டாயம்
x

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகம் இருந்த போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பரவல் குறைந்ததை அடுத்து அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்தநிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பொது இடங்களில் முககவசம் அணிவது நேற்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து தான் வரவேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டும் வருகிறது. அதை கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.


Next Story