மாநகராட்சி, நகராட்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான நிதி உச்சவரம்பு உயர்வு


மாநகராட்சி, நகராட்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான நிதி உச்சவரம்பு உயர்வு
x

மாநகராட்சி, நகராட்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதிக்கான நிதி உச்சவரம்பு உயர்வு தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரின் கீழ் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் வருகின்றன. பாதாள சாக்கடை திட்டங்கள், குடிநீர் வினியோக திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, சாலை பணி, நவீன எரிவாயு தகன மேடைகள், இறைச்சிக்கூடங்கள் அமைத்தல் போன்ற மக்களுக்கான கட்டமைப்புகளை இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேம்படுத்தி வருகின்றன. இப்பணிகளை பெரும் நிதியில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு நிலை அதிகாரியும் குறிப்பிட்ட நிதி அளவில்தான் நிர்வாக அனுமதி வழங்க முடியும். கூடுதல் நிதிக்கான நிர்வாக அனுமதிக்கு உயர் அதிகாரிகளுக்கு கோப்புகளை அனுப்ப வேண்டும். இதனால் திட்டப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே நிர்வாக அனுமதி அளிக்கும் அதிகாரிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிதி உச்சவரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் அரசுக்கு அனுப்பி இருந்தார்.

அதை கவனமாக பரிசீலித்த அரசு, நிர்வாக அனுமதி வழங்கும் திட்டங்களுக்கான நிதி அளவை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சிகளில் ரூ.1 கோடி வரையிலான திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களும், ரூ.1 கோடிக்கு மேல் ரூ.10 கோடிக்குள் நகராட்சி நிர்வாக இயக்குனரும், ரூ.100 கோடிக்கு மேல் அரசும் நிர்வாக அனுமதி வழங்கும். மாநகராட்சி மேயர்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், மாநகராட்சி ஆணையர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான திட்டப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்க முடியும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.


Next Story