அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர்மழை
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் அமைந்துள்ளன. இதில் பெரியாறு அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். பிளவக்கல் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. பெரியாறு அணையின் நீர் இருப்பு 20.65 அடியாக இருந்தது.
இதையடுத்து தொடர்மழை பெய்ததால் பெரியாறு அணையில் 7.7 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 28.22 அடியாக உள்ளது. அதை போல் கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடியாகும். தொடர்மழையினால் நீர்மட்டம் 6.5 அடி உயர்ந்து தற்போது 23.62 அடியாக உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கோடை நெல் சாகுபடியை முடித்து முதல் போக நெல் சாகுபடி செய்ய தயார்நிலையில் உள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்பிடிப்பு பகுதி, நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையானது தொடர்ச்சியாக பெய்தால் கண்மாய்களுக்கும், நீர் வரத்து தொடங்கி விவசாய பணிகள் மேற்கொள்ள உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.






