பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் வரத்து 330 கன அடியாக அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் வரத்து 330 கன அடியாக அதிகரிப்பு
x

ஆந்திர விவசாயிகள் தண்ணீர் எடுப்பு குறைந்ததால், பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 330 கன அடியாக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்

பிரதான ஏரி

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மாதம் 4-ந் தேதியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை அதிகமாக பயன்படுத்தும் போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவதும், பயன்பாடு குறையும் போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பதும் ஆக உள்ளது. நேற்று முன்தினம் வரை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு தண்ணீர் வரத்து 356 கன அடி வீதம் அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.62 அடியாக பதிவாகியது.

1.263 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story