தேங்காய் பருப்பு விலை உயர்வு


தேங்காய் பருப்பு விலை உயர்வு
x

தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், சேமங்கி, முத்தனூர், ஓரம்புப்பாளையம், நல்லிகோவில், பழமாபுரம், புன்னம்சத்திரம், புன்னம், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள போது கூலி ஆட்கள் மூலம் தேங்காயை பறித்து மட்டையை அகற்றிவிட்டு முழு தேங்காயாகவும், அதேபோல் தேங்காயில் உள்ள தேங்காய் பருப்பை எடுத்து நன்கு உலர வைத்து எடுத்த தேங்காய் பருப்பையும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இளங்கோ நகர் வெள்ளதாரை, நடையனூர், முனிநாதபுரம், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் வந்திருந்து சாலை ஓரத்தில் அமர்ந்திருந்து விவசாயிகள் கொண்டுவரும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை கிலோ கணக்கில் வாங்கி லாரிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர்.

வாங்கிய தேங்காய் பருப்புகளை பிரபலமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ முழுத் தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ24.65-க்கும், தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.75.89-க்கும் வாங்கிச் சென்றனர். இந்த வாரம் முழுத் தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ25.79-க்கும், தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.77.69-க்கும் வாங்கிச் சென்றனர். தேங்காய் பருப்பு, முழுத்தேங்காய் வரத்து குறைவால் தேங்காய் பருப்பு, முழுத் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story