மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x

மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

தொட்டி பாலம்

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டி பாலமும் ஒன்றாகும். மாத்தூர் தொட்டிப்பாலம் 1,240 அடி நீளமும் 103 அடி உயரமும் கொண்டதாகும். ஆசியாவிலேயே நீளமானதும், உயரமானது என சிறப்பு பெற்ற இந்த பாலத்தில் 28 பிரமாண்ட தூண்கள் உள்ளன.

பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இந்த தொட்டி பாலத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் கொண்டு செல்லவும், மறு பகுதியை சுற்றுலா பயணிகள் நடைபாதையாகப்பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை

மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு நேற்று காலை முதலே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து, தொட்டிப்பாலத்தின் வழியாக நடந்து சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

தற்போது இதமான வெயில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழை என மாத்தூர் பகுதி ரம்யமாகாக்காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் உள்ள ரப்பர் மரங்கள் பச்சைப்பசேல் என காட்சி அளிக்கிறது. தொட்டிப்பாலத்தில் நடக்கும்போது பரளியாற்றின் இரு கரைகளிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை நெடிதுயர்ந்து வளர்ந்து பச்சையாக காட்சி தரும் மரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் நுங்கு, அன்னாசி, பலாப்பழம் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் ஆசை தீர வாங்கி சாப்பிட்டனர்.

இனிய அனுபவம்

மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை சென்று, கீழே உள்ள படிக்கட்டுகள் வழியாக நடந்து வருவது இனிய அனுபவமாக இருந்தது என சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

அதே சமயம் அங்கு உடைந்து கிடக்கும் யானை, டயனோசர் உருவங்களை சரிசெய்வதோடு, தொட்டிப்பாலச்சுவர்களுக்கு வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story