வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வாகன நிறுத்த இடமில்லாததால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் வாகன நிறுத்த இடமில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் வாகன நிறுத்த இடமில்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகர் பகுதியாக இருப்பது தபால் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் பகுதி வரையில் உள்ள ½ கிலோமீட்டர் சாலை மட்டுமே. இந்த சாலையில் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் நிறுத்தம், ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியிலும் நகராட்சி அலுவலகத்திற்கு முன்புறமும் பயணிகள் நிழற்குடை என்று பெரும்பாலான இடங்கள் அரசு பஸ் பயன்பாட்டிற்கே அமைந்துள்ளது. இதனால் அரசு பஸ்களால் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பழைய பஸ் நிலையம் பகுதியில் அரசு பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பஸ் நிலையம் பயன்படாமல் உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அரசு பஸ் நிலையத்தில் தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரக்கூடிய டிரைவர் கண்டக்டர்களின் சொந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள இடங்கள் எல்லாம் பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை நகரில் வாடகை கார் வேன், டூரிஸ்ட் கார், வேன், மினி வாடகை லாரிகள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமேயில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் அரசு விடுமுறை நாட்களிலும் வால்பாறை பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகிறார்கள்.
கள ஆய்வு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- சுற்றுலாவை பொறுத்தவரை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதற்கு ஒரே காரணம் அமைதி, இயற்கை சூழல், பசுமையான தேயிலை தோட்டங்கள், பறந்து விரிந்து காணப்படும் வனப்பகுதிகள் இதற்காக மட்டுமே.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை, வனத்துறை, போக்குவரத்து துறை, அரசு போக்குவரத்து கழகம் இணைந்து வால்பாறை பகுதியில் கூட்டு கள ஆய்வு செய்து வால்பாறை பகுதியின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஒதுக்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.