கிராமங்களில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரிப்பு
சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது விற்பனை
சிவகாசி உட்கோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தாய் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சில இடங்களில் மது கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் இந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்துள்ளது. அனுமதியின்றி மதுவிற்பனை நடப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயனுக்கு ரகசிய தகவல் அளித்தனர்.
தனிப்படை
இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக வீடுகள், வாகனங்கள், கடைகள், பொது இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தனிப்படை ஒன்றை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் அமைத்துள்ளார்.
இந்த தனிப்பிரிவில் 5 போலீசாரும் உள்ளனர். இவர்கள் கிராமங்களில் திடீர் ஆய்வு செய்து அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்து தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை தனிப்பிரிவு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு
ஒரு சில கிராமங்களில் அனுமதியின்றி நடைபெறும் மது விற்பனை குறித்து போலீஸ் நிலைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு பல மாதங்கள் அந்த கிராமத்தில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதேபோன்று ஒரு சம்பவம் சிவகாசி உட்கோட்டத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் அனுமதியின்றி நடைபெறும் மதுவிற்பனையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது மாவட்ட போலீஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.