ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்:
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது
அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 72,713 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரை பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்தபடி தண்ணீர் ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீதும் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவுவாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதிகளான ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், நாகமரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.