ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை
கர்நாடக மாநிலம் பெங்களூரு, உடுப்பி, உத்தரக்கன்னடா, தட்சிண கன்னடா, குடகு, கோலார், பாகமண்டலா, மடிக்கேரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
வெள்ளப்பெருக்கு
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை வெள்ளம் மூழ்கடித்து செல்கின்றன. மேலும், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து
மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, முதலைப்பண்ணை, நாகமரை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.