ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மீண்டும் மழை
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
கண்காணிப்பு
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும், கூடுவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.