தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பெரும்பாலான அணைகள் திறப்பு
தொடர் மழையால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை,
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகமாகி பெரும்பாலான அணைகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
இதில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 200 கனஅடியாக அதிகரித்தது. வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவே உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நேற்றைய நீர்மட்டம் 50.25 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்தது. 5 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 142 அடி ஆகும். தற்போது 137.05 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,109 கனஅடி ஆக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது 70.01 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 4,230 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 635 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.21 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.15 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 144 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 68 அடியாக உள்ளது.
அணைக்கு வரும் 125 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
பைக்காரா அணை
சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். தற்போதைய நீர்மட்டம் 159.50 அடி. நீர்வரத்து 830.41 கன அடி. வெளியேற்றம் 51.36 கன அடி ஆகும்.
இதேபோல் பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடி. தற்போதைய நீர்மட்டம் 40.93 அடி. நீர்வரத்து 1300 கனஅடி. அணையில் இருந்து 177 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. தற்போதைய நீர்மட்டம் 88 அடி.
பேச்சிப்பாறை அணை
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி. இதில் தற்போதைய நீர்மட்டம் 41.23 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 387 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 316 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பெருஞ்சாணி அணையின் மொத்த கொள்ளளவு 77 அடி. தற்போது 69.73 அடி நீர் உள்ளது. அணைக்கு 356 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 450 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். அதில் 45.20 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடி
1,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 64 கனஅடி நீர் அனுப்பிவைக்கப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பெரும்பாலான அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர் வாகனங்கள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.