திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மலையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருவட்டார்:
மலையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், தற்போது சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திற்பரப்பில்...
திற்பரப்பில் நேற்று காலை சாரல் மழையுடன் குளுகுளு சீசன் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்தனர். அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்தனர். அருவியை அடுத்துள்ள மரங்கள், மலைத்தொடர்கள் பச்சைப்பசேல் என காட்சி தருகிறது. மேகக்கூட்டங்கள் அப்பகுதியில் தவழ்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக உள்ளது. பள்ளிக்கூடம் திறந்துள்ளதால் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.