காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:
தண்ணீர் திறப்பு
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு போதிய அளவு பெய்யவில்லை எனக்கூறி கர்நாடக அரசு அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
இதனிடையே கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.
மேட்டூர் அணை
இந்தநிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதம்தோறும் அளிக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக அளிக்கவில்லை. அதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசன தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் குறைந்து கொண்டே வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 ேகாடி கனஅடி) ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 11.18 டி.எம்.சி.ஆக உள்ளது. இதே நிலைமை நீடித்தால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதற்கிடையே கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 367 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
அந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 421 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.