ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.
பென்னாகரம்,
கர்நாடகாவில் உள்ள காவிரிநீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
குளிக்க தடை
நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 3-வது நாளாக தடை விதித்து உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இதற்கிடையே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 10,232 கனஅடி வீதமாக இருந்த நீர்வரத்தானது நேற்று மாலை வினாடிக்கு 15 ஆயிரத்து 232 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 64.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 65.01 அடியாக உயர்ந்துள்ளது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
அதேநேரத்தில் தற்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இதன்காரணமாக நேற்று அந்த அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9,071 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.