சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில் கனமழை
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்கு கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்ற காலை வரை வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரம், எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வால்பாறையில் கடும் குளிர் நிலவியது. பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.
வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சி ஏற்பட்டு, தண்ணீர் கொட்டி வருகின்றன. இதன் காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கி வரும் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சோலையாறு அணைக்கு வினாடிக்கு 3,463 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் சில நாட்களாக முழுகொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோலையாணு அணையில்் இருந்து மின் நிலையங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு மின் உற்பதிக்கு பின் 798 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், மின் நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்தபின் 600 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கும் திறந்து விடப்படுகிறது. இதன்படி அணையில் இருந்து 1,398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தப்படி அணையை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாசில்தார் விஜியகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை பகுதி முழுவதும் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேல்நீரார்-67, கீழ்நீரார்-46, சோலையாறு அணை-53, வால்பாறை-60 மழை பெய்துள்ளது.