வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது அணை மீண்டும் 70 அடியை கடந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தைப் பொறுத்து கூடுதல் தண்ணீர் அணையில் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது.

நேற்று 1938 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை 2320 கன அடி நீர்வரத்து உள்ளது. நேற்று அணையில் இருந்து 1269 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 2320 கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.

இதனால் கரையோரமுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றைக் கடப்பதோ, துணி துவைப்பதோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதோ கூடாது என எச்சரித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.85 அடியாக உள்ளது.

அணைக்கு 1333 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி நீர் வருகிறது. அதில் 40 கன அடி நீர் பாசனத்துக்கும், 80 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.67 அடியாக உள்ளது.

அணைக்கு 226 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் பாசனத்திற்கும், 196 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை 4, போடி 2.4, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.


Next Story