கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 95,000 கன அடியில் இருந்து 1,10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 72,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து 38 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.