நீர்நிலைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்


பெரம்பலூரில் மருதையாறு, கல்லாறு, வெள்ளாறும் உள்ளன. இந்தநிலையில் நீர்நிலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர்

5 பேர் பலி

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலர் ஆறு மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்க செல்கிறார்கள். அப்போது ஆர்வமிகுதியால் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரை இழக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நீர்நிலைகளில் தவறி விழுந்து இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதற்கு ஆற்றில் இறங்கும்போது எங்கு ஆழமான பகுதி இருக்கிறது. எங்கு சுழல் இருக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாகும். மேலும், நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளிக்கும்போது, ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மதுபோதையில் உற்சாகம்

வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் சில வாலிபர்கள் ஆற்றில் இறங்கி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக குளிக்கிறார்கள். சிலசமயங்களில் அவர்கள் மது அருந்திவிட்டு ஆற்றுக்குள் இறங்குவதும் உண்டு. இதனால் பயத்தை உணராமல் கண்மூடித்தனமாக ஆற்றில் இறங்கி புதைமணலுக்குள் சிக்கி கொள்கிறார்கள். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் நண்பர்களுடன் ஆற்றுக்கு சென்று குளித்து மகிழ்வார்கள். அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் குளிக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நீச்சல் கற்றுக்கொள்ள முடியவில்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளரும், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியருமான அன்பரசு:- நமது முன்னோர் காலத்தில் ஆண்கள், பெண்களில் பெரும்பாலானோருக்கு நீச்சல் தெரியும். அப்போது அவர்கள் மழைக்காலங்களில் நிரம்பி வழியும், கிணறு, குளம், குட்டை, ஏரிகளில் நீச்சல் கற்றுக்கொண்டனர். தற்போது உள்ள குழந்தைகள் 3 வயதில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பள்ளி பருவத்தை கடந்தும் நீச்சல் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் படிப்பு, படிப்பு என்று அதிலே முக்கியத்துவம் காட்டுகின்றனர். நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை. இதனால் மழைக்காலங்களில் நிரம்பி வழியும் நீா்நிலைகளுக்கு குளிக்க செல்லும் போது நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி விலைமதிக்க முடியாத உயிரை விடுகின்றனர். நீச்சல் தெரிந்தால் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம். தற்போது மாவட்டத்தில் விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம் உள்ளது. அதில் 12 நாட்களில் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம்.

படிப்பில் மட்டுமே கவனம்

பெரம்பலூர் அசோக் நகரை சேர்ந்த பள்ளி மாணவர் லோகித்:- நான் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்ல உள்ளேன். நகர்ப்புறத்தில் வாழ்வதால் நீச்சல் கற்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இனி 10-ம் வகுப்பு செல்லவுள்ளதால் முழு நேரம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். இதனால் எனது பெற்றோர் என்னை கோடை விடுமுறையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளத்தில் கற்று கொடுக்கப்படும் நீச்சல் பயிற்சியில் சேர்த்து விட்டனர். சேர்ந்து சில நாட்களில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் ஓரளவுக்கு நீச்சல் கற்றுக்கொண்டேன். பயிற்சி முடிவதற்குள் நன்றாக நீச்சல் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

திறந்தவெளி கிணறுகள்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்த பிரியா:- எனக்கு நீச்சல் தெரியாது. இனிவரும் காலங்களில் நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் தான் எனது மகளை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கற்று கொடுக்கப்படும் நீச்சல் பயிற்சியில் சேர்த்துள்ளேன். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்சியாளர்களை கொண்டு நீச்சல் கற்றுக்கொடுக்க வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி கிணறுகளை வலை போட்டு மூட வேண்டும்.

இயற்கை உபாதை

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி:- கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாரின் 4 வயது மகன் சுகன் வீட்டின் அருகே ஏரிக்கரை ஓரம் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் மாவட்டத்தில் மது பிரியர்களில் சிலர் மது போதையில் கிணற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். மழைக்காலங்களில் நீர்நிலைகளில் நீச்சல் தெரியாதவர்கள் குளிக்க செல்லும் போது நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனால் தற்போது போலீசார் கிராமங்களுக்கு, பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நீர்நிலைகளுக்கு செல்ல அனுமதிக்காதீர்கள். முதலில் அவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சமூக ஆர்வலர்கள்:- நீர்நிலைகளில் கரையோரங்களில் தூா்வாருகிறோம் என்ற பெயரில் ஆழப்படுத்துவதை தடுக்க வேண்டும். வண்டல் மண் நீர்நிலைகளின் மையப்பகுதியில் தான் எடுக்க வேண்டும். நீர்நிலைகளின் கரையோரத்தில் ஆழப்படுத்துவது, வண்டல் மண் எடுப்பது போன்றவற்றால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் குடிக்க வருபவர்கள், கை, கால்களை கழுவ வருபவர்கள் தவறி விழுந்து இறக்க நேரிடும். ேமலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளும் உயிரிழக்க நேரிடும். நீர்நிலைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் முன்பு நின்று கொண்டு ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முதலில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம். குழந்தைகள், மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர், உறவினர்களுடன் தான் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டும்.

நீரில் மூழ்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய வீர மங்கைகள்

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது நீர்த்தேக்க பள்ளத்தில் குளித்து கொண்டிருந்த நீச்சல் தெரியாத 4 இளைஞர்கள் ஆழத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய படி அபாய குரல் எழுப்பியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு துணி துவைத்துக் கொண்டிருந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி ஆகிய 3 பேரும் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்களை நோக்கி வீசினர். அவர்களில் 2 போ் நீரில் மூழ்கி இறந்துவிட்ட நிலையில், கார்த்திக், செந்தில்வேலன் ஆகிய 2 இளைஞர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். நீரில் மூழ்கியவர்களில் 2 பேரை தங்களின் உயிரையும், மானத்தையும் பொருட்படுத்தாமல் போராடி காப்பாற்றிய செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பேருக்கும் வீரதீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதை தமிழக அரசு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story