ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா:கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்றினார்


ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா:கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்றினார்
x

ஈரோடு ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஈரோடு

ஈரோடு ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 7.30 மணி முதல் மைதானத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள். காலை 8 மணிக்கு மேல் அதிகாரிகள் மைதானத்துக்கு வந்தனர். காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் கொடி மேடைக்கு வந்து போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் காலை 9.05 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடி மேடைக்கு வந்தார். முன்னதாக அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி அரசு மரியாதையுடன் கலெக்டர் விழா மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கொடி மேடைக்கு வந்ததும், கொடிக்கம்பத்தில் ஏற்றுவதற்கு தயாராக கட்டப்பட்டு இருந்த தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டார். பின்னர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள், பொதுமக்கள் தேசியக்கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள்.

அணிவகுப்பு மரியாதை

தொடர்ந்து திறந்த ஜீப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கொடி மேடைக்கு வந்ததும், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர தினமகிழ்ச்சியின் அடையாளமாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா ஆகியோர் பச்சை, வெள்ளை, காவி நிற பலூன்களை விண்ணில் பறக்கவிட்டனர்.

விழாவில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் வாரிசுகளை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கவுரவப்படுத்தினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

வேளாண்மை -உழவர் நலத்துறை மூலம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் திட்டம், வேளாண் பொறியியல் துறை சார்பில் கிராம அளவிலான வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைத்தல் ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் என அரசு துறைகள் மூலம் 7 பேருக்கு ரூ.2 கோடியே 73 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள்

தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம். ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், கொங்கம்பாளையம் எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.வி.சி.ஆர்.செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிரீன் பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நடனம் ஆடி மகிழ்வித்தனர். பெருந்துறை சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை மயிர்க்கூச்செரிய வைத்தது. பி.பி.அக்ரகாரம் கிறிஸ்து ஜோதி பள்ளி பெருவங்கி இசைக்குழுவினர் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை வரவேற்றனர்.

விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story