ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா


ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா
x

சுதந்திர தின விழா நடக்கும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மேடை, பந்தல் அமைக்கப்பட்டதை படத்தில் காணலாம். 

தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:45 PM GMT)

ஊட்டியில் நாளை(செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

நீலகிரி

ஊட்டியில் நாளை(செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதியான நாளை(செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து சுதந்திர தின விழாவில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.

சுதந்திர தின விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

போலீஸ் அணிவகுப்பு மரியாதை

இதற்கிடையே போலீசாரின் அனிவகுப்பு மரியாதை நடக்கிறது. இதையொட்டி போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி, பள்ளி-கல்லூரி மாணவர்களின் நடனங்கள் நடைபெறுகின்றன. சுதந்திர தின விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனைச்சாவடிகளில் போலீசார் பணி சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

ரெயில் நிலையம், பஸ் நிலையம், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சுதந்திர தின விழா நடக்கும் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்து மேடை அமைப்பது உள்பட பணிகளை பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story