பொள்ளாச்சி பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலம்


தினத்தந்தி 16 Aug 2023 1:00 AM IST (Updated: 16 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சப்-கலெக்டர் அலுவலகம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கூமாட்டி, கோழிகமுத்தி மலைக்கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு சமுதாய உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதில் நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார்கள் ஜெயசித்ரா, ரேணுகாதேவி, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் வெங்கடாச்சலம், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயசித்ரா தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

அரசு ஆஸ்பத்திரி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கடந்த ஆண்டு ஆஸ்பத்திரியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்பட அனைத்து பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் மூலம் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிரட் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கயிறு வாரிய மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மண்டல அலுவலர் சாபு தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவா தேஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வனச்சரகர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ரத்தினம் கனகராஜ் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில், ஆணையாளர் ரேவதி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றி போலீசாருக்கு இனிப்புகள் வழங்கினார். வதம்பச்சேரி, ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், பூராண்டாம்பாளையம், செஞ்சேரிப்புத்தூர், குமாரபாளையம் ஆகிய ஊராட்சிகள் முறையே அதன் தலைவர்களான ராஜாமணி கந்தசாமி, எம்.ஜோதிராஜ், சரிதா வீரமுத்து, ராஜேஸ்வரி, எஸ்.கே.டி.பழனிசாமி, சாவித்திரி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி ஊழியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல் ஒன்றியத்தில் ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர், சுல்தான்பேட்டை செஞ்சேரி, செஞ்சேரிமலை, பூராண்டாம்பாளையம் உள்பட அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாசில்தார் சிவக்குமார் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் தலைமை இடத்து துணை தாசில்தார் செல்லத்துரை, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் முத்து, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் சமீதா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாளக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. செ.தாமோதரன் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.கிணத்துக்கடவு, காளியண்ணன்புதூர், முத்துக் கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நெ.10.முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பல அரசு பள்ளிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


நகராட்சி அலுவலகம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையாளர் ஸ்ரீதேவி வழங்கினார். தொடர்ந்து விபத்து இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக வாகனம் ஓட்டிய டிரைவர் சக்திவேலுக்கு தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி என்ஜினீயர், நகர்நல அலுவலர், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெகமம்

பெரிய நெகமம் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி சபரி கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றினார். மகளிர் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவ -மாணவிகளுக்கும் ஸ்ரீ கே.வி.கே எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் கே. வி. கே. எஸ். சபரி கார்த்திகேயன் ஊக்கத்தொகை வழங்கினார். இதில் பேரூர் செயலாளர் ராசு என்கிற முத்துக்குமார், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கலைமணி தண்டபாணி, கவுன்சிலர்கள் பரமேஸ்வரி நந்தவேல், முருகன், காமாட்சி சுந்தரம், அரவிந்த்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லதாங்கி வித்யா மந்திர் பள்ளி

பொள்ளாச்சி ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு விருந்தினர் சியாமளா தேசிய கொடியை ஏற்றி வைத்து, புறாக்களை பறக்கவிட்டார். இதை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பள்ளி தாளாளர் சாந்திதேவி சுதந்திர தின சிறப்பு ஆற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கொய்யா, புங்கன், நாவல், பலா, நெல்லி, மூங்கில் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி செயலாளர் ரமேஷ் ராஜ்குமார், நிர்வாக இயக்குனர் ஸ்ரீரிதன்யா, அறங்காவலர் உமாதேவி, கல்வி இயக்குனர் சந்திராவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏ.ஆர்.பி. இண்டர்நேஷனல் பள்ளி

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூர் ஏ.ஆர்.பி. இண்டர்நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். மேலும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி வரவேற்று பேசினார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை தமிழ்செல்வி நன்றி கூறினார்.

சூடாமணி கூட்டுறவு சங்கம்

பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள சூடாமணி கூட்டுறவு சங்கத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் பதிவாளர் கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகராஜ், பி.ஆர்.பாண்டியன், மாரிமுத்து, மார்டின், சுந்தரம் மற்றும் இயக்குனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வால்பாறை

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் துணை தலைவர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர் அழகுசுந்தரவள்ளி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நகராட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தேசிய கொடியை ஏற்றினார். இதையடுத்து அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கினார். நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பொது மக்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

வால்பாறை எம்.ஜி .ஆர். நகர் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வள்ளி நாயகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ -மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கலை, அறிவியல் கல்லூரி

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் சிவசுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.போலீஸ் நிலையத்தில் சப் -இன்ஸ்பெக்டர் முருகனாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகளோடு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.



Next Story