உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் -கவர்னர் பேச்சு


உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் -கவர்னர் பேச்சு
x

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

வேலூர்,

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு 62 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், 215 பேருக்கு முனைவர் பட்டங்கள் உள்பட 8,168 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதன் அடையாளமாக 10 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வி.ஐ.டி. கல்வி நிறுவனம் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஆகும். இந்தியாவில் முதல் 5 இடத்தில் வி.ஐ.டி. கல்வி நிறுவனம் இருப்பது பாராட்டுக்குரியது.இந்தியா- அமெரிக்க நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது. 2 நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவுரவ டாக்டர் பட்டம்

கவுரவ விருந்தினராக அமெரிக்க நாட்டின் துணை தூதர் ஜூடித்ராவின் கலந்து கொண்டு பேசினார்.

அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

30 நாடுகளில் உயர்கல்வி இலவசம்

வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்திய அளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் முதல் 200 இடங்களுக்குள் வர வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உள்ளோம். ஏழை மக்கள் உயர்கல்வி கற்பதில் சிரமம் உள்ளது. அனைத்து நாடுகளும் உயர்கல்வியில் கவனம் செலுத்துகின்றன.

30 நாடுகளில் உயர்கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. அதுபோல இந்தியாவிலும் அனைவருக்கும் உயர்கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி சங்கர் விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதியவருக்கு முனைவர் பட்டம்

நிகழ்ச்சியில் ஐதராபாத்தை சேர்ந்த 75 வயதான வெங்டேசன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story