டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்


டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி - மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர்
x

உலக நாடுகள் வியக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்திய அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

தொழில் வர்த்தக சபை கூட்டம்

தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113-வது ஆண்டு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. வர்த்தக சபையின் தலைவர் அருண் வரவேற்றார். மத்திய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத்துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

அபரிமிதமான வளர்ச்சி

பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் வியக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளோம். புதிய தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்துறையில் தலைமை இடத்தை வகிக்கும் வகையில் வளர்ச்சியை எட்டி வருகிறோம்.

தமிழக மண்ணின் மைந்தரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திரமோடி எடுத்து வரும் முயற்சி மற்றும் பங்களிப்பு மகத்தானதாக உள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், என்னையும், பிரதமர் நரேந்திரமோடியையும் சந்தித்த போது, இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாகி இருப்பதாகவும், இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உற்சாகமான கால கட்டம்

கடந்த 9 ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் கணிசமான தூரம் பயணித்துள்ளோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருப்பதால், இந்திய வரலாற்றில் தற்போது மிகவும் உற்சாகமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை என்னால் திட்டவட்டமாக கூற முடியும்.

பல கடின உழைப்புக்குப் பிறகு, உலகில் அதிக பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடுகளில் 5-வது இடத்தில் இந்தியாவை கொண்டு வந்துள்ளோம். உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்த நாடுகளில் இந்தியாவையும் இடம்பெற செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் தூதர் லைஸ் டால்பாட் பாரே, தென்னிந்திய வர்த்தக சபை துணை தலைவர் சிவசங்கர், செயலாளர் வினோத் சாலமோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story