சூரிய ஒளியால் மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5-வது இடம் மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி


சூரிய ஒளியால் மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5-வது இடம் மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

சூரிய ஒளிமின்சாரம் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

சூரிய ஒளிமின்சாரம் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

மத்திய மந்திரி வருகை

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் வி.கே.சிங் காரைக்குடி வந்தார். அவர் நேற்று காலை 8.45 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி நகர பொதுச்செயலாளர் முனியசாமி வீட்டில் காலை உணவும் அருகில் உள்ள நகர பொருளாளர் சரவணன் வீட்டில் தேநீரும் அருந்தினார். பின் புதுவயல் சென்று கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின் புதுவயல் பகுதியில் உள்ள வீடுகளில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்.

அதன் பின் சாக்கோட்டை யூனியன் அலுவலகம் சென்றார்.அங்கு அவரை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின் மத்திய அரசின் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார், பின் மித்திரங்குடியில் பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அதன் பின் புதுவயலில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒன்றிய தலைவர் ரமேஷ் வீட்டில் தேநீர் அருந்தினார். பிறகு காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள செட்டிநாடு கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5-வது இடம்

இந்திய பொருளாதாரம் 6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2014- ல் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளையும் நாம் பொருளாதார வளர்ச்சியில் முந்தி விட்டோம். இந்தியாவில் அன்னிய செலாவணி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 162 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. 130 நாடுகளுக்கு இலவசமாக ெகாரோனா தடுப்பூசிகளை வழங்கினோம். இதனால் உலகமே இந்தியாவை போற்றுகிறது. கடந்த 60 வருடங்களில் காங்கிரசால் செய்ய இயலாததை பாரதீய ஜனதா அரசு 9 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது. சூரிய ஒளியினால் மின்சார உற்பத்தியில் உலகத்திலேயே 5-வது இடத்தில் உள்ளோம். விரைவில் முதல் இடத்திற்கு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்

பின்னர் மதியம் கணேசபுரத்தில் உள்ள நகர துணை தலைவர் பழனியப்பன் வீட்டில் மத்திய உணவு அருந்தினார்.பிறகு 3.30 மணி அளவில் கோட்டையூர் பைபாஸ் சாலையில் உள்ள யுனிவர்சல் இன்ஸ்டியூட் சென்று திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை நடத்தும் யுனிவர்ஷல் இன்ஸ்டியூட் சென்றார். அங்கு மத்திய மந்திரியை அப்பயிற்சி நிறுவனத்தின் சேர்மன் விஸ்வநாத கோபால், நிர்வாக இயக்குனர் ஆதீனம் ஆகியோர் வரவேற்றனர். அங்கு மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் குறுகிய கால இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பயனாளிகளோடு கலந்துரையாடினார்.

அதன் பிறகு பிரசன்னாமகாலில் பா.ஜனதா விவசாய அணியினரோடு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி கலந்துரையாடினார். அதன்பின் அவர் புதுக்கோட்டை சென்றார்.மத்திய மந்திரி வி.கே.சிங் சுற்றுப்பயணத்தின் போது மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் சோழன் பழனிச்சாமி, பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில துணை தலைவர் பாண்டித்துரை, நகர் தலைவர் பாண்டியன், ஒன்றியத்தலைவர் செல்வா, மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story