மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா: அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்


மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா: அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
x

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருட விழா நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை 20 நாட்கள் மட்டும் இந்த விழா நடக்கிறது. முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை சுற்றுலா துறை முதன்மை செயலர் சந்திரமோகன் வரவேற்றார்.

சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் முதலிடம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கின்ற ஒரு நிகழ்வாகும். மாமல்லபுரத்தை 7-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள பாரம்பரிய சிற்பங்களை வடிவமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச்சின்னங்கள் இன்று மாமல்லபுரத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து வருகின்றன என்றால் அது மிகையாகாது. சுற்றுலாத்துறை சார்பில் மரகத பூங்காவை சீரமைத்தல், அர்ச்சுனன் தபசு பகுதியில் ஔி, ஒலி காட்சி ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் விசுவநாதன், மல்லை சத்யா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார், பூபதி, கெஜலட்சுமி கண்ணதாசன், வள்ளிராமச்சந்திரன், லதாகுப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் பிரியதர்ஷினி நிருத்யாலயா குழுவினரின் பரதநாட்டியம், மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் சென்னை இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசையும் நடைபெற்றது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா தொற்று அச்சம் காரணமாக விழாவை கண்டுகளிக்க நேற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் காணப்படவில்லை. உள்நாட்டு சுற்றுலா பயணிகளே அதிக அளவில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story