மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துஇந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்தும் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லா வரவேற்றார். பொருளாளர் முருகன், செய்தி தொடர்பாளர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மங்காபிள்ளை கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர் சம்பத், பொறுப்பாளர் மருது, ஒன்றிய நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, ராஜேஷ், கார்த்திக்பாலன், முனியப்பன், தனசேகர், உதயகுமார், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், அங்கு நடந்து வரும் கொடூர தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வரும் பிரதமர் மோடி, பதவி விலகக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயஸ்டாலின் நன்றி கூறினார்.