சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

கருப்பூர்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் தாழ்ந்த ஜாதி யார்? என்று ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட்டு இருந்தது. இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும் அந்த வினாத்தாள் பல முரண்பாடுகளை கொண்டு இருக்கிறது, குறிப்பாக இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ற தலைப்பில் அந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது என்்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பவித்ராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, தந்தை பெரியார் பெயரில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இடையே சாதி உணர்வை தூண்டும் நிர்வாகத்தை கண்டிக்கிறோம், வினாத்தாளில் தொடர்பில்லாத வார்த்தையை உருவாக்கிய பேராசிரியர் குழுவை கண்டிக்கின்றோம், பாகுபாடு இன்றி இதில் தொடர்புடைய அனைவரையும் பணி நீக்கம் செய்திட வேண்டும், மேலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வினாத்தாள் நகல்களை தீயிட்டு எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் உத்தம் சிங், மாநகர துணை தலைவர் அரவிந்த் உள்பட மாணவர்்் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story