தொழில் முதலீட்டு கழக சிறப்பு கூட்டம்


தொழில் முதலீட்டு கழக சிறப்பு கூட்டம்
x

வாணியம்பாடியில் தொழில் முதலீட்டு கழக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தோல் ஏற்றுமதியாளர்கள் இணைந்து நடத்திய, புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. வாணிடெக் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தோல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தெற்கு மண்டல தலைவர் இசார் அஹமத் கலந்து கொண்டார். தோல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் சிறப்புரையாற்றினார். வாணியம்பாடி டேனரி சங்கத்தின் கவுரவ தலைவர் முஹம்மத் மொபின் மற்றும் தமிழ்நாடு முதலீட்டு கழகத்தின் முதுநிலை மண்டல துணை மேலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் இந்தியாவில் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் இருந்து 60 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில் திருப்பத்தூர், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தோல் தொழில் துறையில் மேம்படுத்தப்பட்ட நவீன திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள், திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் மூலம் 200 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் தோல் தொழிலை மேம்படுத்துவது குறித்தும், சிறு குறு தொழில் முதலீட்டாளா்கள், புதிய தொழில் முனைவோா்கள் மற்றும் தொழிலை மேம்படுத்த திட்டமிடுவோர் தமிழ்நாடு முதலீட்டுக் கழகத்தை அணுகி கடன் பெறுவது குறித்த வழிமுறைகள், புதிய தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இந்த வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை, டேனரி உரிமையாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வேலூர் கிளை மேலாளர் கௌரி நன்றி கூறினார்.


Next Story