சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் கே.என்.நேரு தகவல்


சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

கடந்த ஓராண்டில் சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம்

கடந்த ஓராண்டில் சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நேற்று அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி வரவேற்றார்.

விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பில் 486 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.1,000 கோடி நிதி

சேலத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது, பொதுமக்களிடம் இருந்து 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதில், சுமார் 30 ஆயிரம் மனுக்களுக்கு விழா மேடையிலேயே தீர்வு காணப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்தும் வகையில் சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பனமரத்துப்பட்டி ஏரியை ரூ.99 கோடியில் புதுப்பித்து சேலம் மாநகராட்சிக்கு எப்போதும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

100 ஏக்கரில் ஜவுளி பூங்கா

அதன் அடிப்படையில் பனமரத்துப்பட்டி ஏரியை புதுப்பிக்க ரூ.99 கோடியும், மூக்கனேரி ஏரிக்கு ரூ.30 கோடியும், போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு ரூ.21 கோடியும், அல்லிக்குட்டை ஏரிக்கு ரூ.18 கோடியும் என மொத்தம் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.168 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் தேர்வு செய்யும் பணி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளையாட்டு அரங்கம்

சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கு ரூ.530 கோடி நிதியும், 24 மணிநேரமும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.158 கோடியும், விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு ரூ.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அதனை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

486 பயனாளிகள்

விழாவில் 120 மாற்றுத்திறனாளிகளுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 486 பயனாளிகளுக்கு ரூ.2 ேகாடியே 43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவர் உமாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர்கணேசன், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story