ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை பற்றி பரவும் தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை பற்றி பரவும் தகவல் குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுள்ள குட்டி பெண் யானை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது. இந்த யானை, கோவில் மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை ஜெயமாலயாதா என அழைக்கிறார்கள்.
இந்த யானை தினமும் ஆண்டாளை தரிசித்து விட்டு, ஆண்டாள், ெரங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது முன்னே செல்வது வழக்கம். அதேபோல தினமும் காலையில் நடைபெறும் விசுவரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும்.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புத்துணர்வு முகாமில் யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து பாகன்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து புதிய பாகனங்கள் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரூ.10 லட்சம் செலவில் யானைக்காக கிருஷ்ணர் கோவிலில் தனி மண்டபம் அமைத்து நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஏற்கனவே யானை தாக்கப்பட்டதை காரணமாக கூறி யானையை அசாம் மாநிலத்திற்கு அதிகாரிகள் வந்து பிடித்து சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், யானை தற்போது ஆண்டாள் கோவிலில் உள்ளது. யாரும் அழைத்துச் செல்லவில்லை. யானை பற்றி தவறாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது, என்று விளக்கம் அளித்தார்.