பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்
பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு நேற்று மதியம் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கெரகோடஅள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். செங்கம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் மொத்தம் 55 பயணிகள் இருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த பஸ் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சூடப்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பிரேக் போட்டார். மழை பெய்து சாலை நனைந்து இருந்ததால் பஸ் பிரேக் போட்டதும் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
40 பேர் படுகாயம்
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். இந்த விபத்தில் தொட்லாம்பட்டியை சேர்ந்த 8 மாத குழந்தை சம்விதா, தேன்கனிகோட்டையை சேர்ந்த தூருவாசன் (வயது 37), அவருடைய மனைவி ராஜேஸ்வரி (34), ஓசூரை சேர்ந்த விஜயலட்சுமி (28), பவுன்ராஜ் (54), நித்தியா (12), பென்னாகரத்தை சேர்ந்த வாசுதேவன் (47), மதகேரி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (67), ராயக்கோட்டையை சேர்ந்த வீரப்பன் (58), தோமல அள்ளியை சேர்ந்த மாதையன் (59), புலிகரையை சேர்ந்த சக்தி (26), தர்மபுரியை சேர்ந்த முரளிதரன் (24) உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, மகேந்திரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆறுதல்
இதற்கிடையே விபத்தில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மருத்துவ உதவிகளை விரைந்து செய்து கொடுக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார். அவருடன் பேரூராட்சி தலைவர் முரளி உடனிருந்தார்.