ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கைவரிசை: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் ரூ.93 ஆயிரம் 'அபேஸ்'


ஏ.டி.எம்.மில் நூதன முறையில் கைவரிசை: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் ரூ.93 ஆயிரம் அபேஸ்
x

ஏ.டி.எம்.மில் நூதன முறையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் ரூ.93 ஆயிரம் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 48). இவர் திருவாலங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ஆவார். கடந்த 21-ந் தேதி திருத்தணியில் 'ஸ்டேட் வங்கி' அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்குச் சென்ற அமுதா, அங்கிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அந்த நபரும் 20 ஆயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார். அப்போது, அமுதாவின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை மர்ம நபர் அறிந்துகொண்டு, தன்னிடமிருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அமுதாவிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர், அமுதாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அந்த மர்ம நபர் 93 ஆயிரத்து 629 ரூபாயை பணம் எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து, திருத்தணி போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் தெரிவித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் வங்கி ஏ.டி.எம். பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் பணம் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story