பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி


பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கருவறை, சுவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக மன்னன் ராஜராஜ சோழனின் தாயார் திருக்கோவிலூரில் தான் பிறந்தார் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்களும், சங்ககாலப் புலவர் கபிலர் குறித்த கல்வெட்டு ஆதாரங்களும் உள்ள நிலையில் இவற்றை அடிப்படையாகக் கொண்டு படி யெடுக்கும் பணியில்(கல்வெட்டு எழுத்துக்களை நகல் எடுத்தல்) தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.

அதன்படி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ், கல்வெட்டு சிற்றெழுத்தவர்கள் ஜோதி, ஞானபிரகாசம், மகாராஜன் ஆகியோரை கொண்ட குழுவினர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பாவலர், சிங்கார உதியன், சிவன் கோவில் எழுத்தர் மிரேஷ்குமார், குமாரசாமியார், தணிகை கலைமணி, ரவிச்சந்திரன், அருள்நாதன் தங்கராசு மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, திருக்கோவிலூர் அங்கவை, சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேருக்கு தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளை சுத்தம் செய்து, பின்னர் அதை நகல் எடுத்து படிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் நல்நூலகர் அன்பழகன், கவிநிலவன், வரலாற்று ஆசிரியர்கள் அல்லி, மரிய சகாயமெஜிலா, சொர்ண காமாட்சி ஆகியோர் மாணவிகளை வழி நடத்தினர்.


Next Story