சேலம் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு நடத்தினார்.
சேலம்
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 31-வது வார்டில் சன்னதி தெரு, வெங்கடாஜலம் தெரு, ஜலால்கான் தெரு, குண்டு போடும் தெரு, கோட்டை அண்ணாநகர், மேட்டுத்தெரு, கண்ணன் தெரு ஆகிய பகுதிகளில் மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அண்ணா நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவரும் நீரை வெளியேற்றவும், கண்ணன் தெருவில் சமுதாய கூடம் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்பட்டது.
இதேபோல் அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட 32-வது வார்டில் தாதுபாய் குட்டை, கல்லாங்குத்து, முகமதுபுறா, வ.உ.சி. மார்க்கெட் தெரு ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா?, மழைக்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல போதிய வடிகால் வசதி மற்றும் தெரு விளக்குகள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை குறித்து பொதுமக்களிடம் மேயர் ராமச்சந்திரன் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந், உதவி ஆணையாளர் கதிரேசன், கொண்டலாம்பட்டி மண்டல குழுத்தலைவர் அசோகன், செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.