தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் வருகை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூருக்கு வருகிறார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு முகாமை அவர் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எதிர்க்கட்சியினர் சந்தேகம்

இந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் நடக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாமை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். மகளிர் உரிமைத்தொகை வருமா?, வராதா? என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சியினர் எழுப்பி வந்தனர். அந்த சந்தேகத்தை பொய்யாக்கும் வகையில் கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வுடன் முதல்-அமைச்சர் விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைக்கிறார்.

ஆலமரமாக

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 1989-ம் ஆண்டு அப்போது முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதியால் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் பெண் சிசு மரணம் அதிகம் இருந்த தர்மபுரி மாவட்டத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக அப்போது தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் என்ற விதை, தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் கோடி பணத்துடன் ஆலமரமாக வளர்ந்து பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது. இந்த நிலையில் அவருடைய மகனான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற சிறப்புமிக்க திட்டத்தின் விண்ணப்பங்கள் பதிவு முகாமை முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story