பட்டாசு விற்பனை நிலையங்களில்தொடர் ஆய்வு செய்ய வேண்டும்


பட்டாசு விற்பனை நிலையங்களில்தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:00 AM IST (Updated: 12 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை நிலையங்களில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு - மீட்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள், குடோன்கள் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இருமுறை ஆய்வு

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரிமாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையங்கள், பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் மாதம் இருமுறை ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்து அவர்களுடன் இணைந்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆய்வின்போது இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு இருப்பு உள்ளனவா? என்பதையும், உரிமம் வழங்கப்பட்ட அளவுக்குட்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனவா? என்பதையும், பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்துள்ளனரா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதா? என்பதை உறுதிபடுத்திட வேண்டும். இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story