புதுச்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில்மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு


புதுச்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி வளாகத்தில்மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே எடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் இணைப்பு குழாய்கள்

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களங்காணி ஊராட்சியில் ரூ.1.50 லட்சத்தில் மாரியம்மன் கோவில் முதல் களங்காணி முதன்மை சாலை வரையில் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குட்டை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருமலைப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்காலில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளின் வகைகள், எண்ணிக்கை மற்றும் பயன்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பேவர் பிளாக் சாலை

அதைத்தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இடையப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் கனவாய் வரை குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டதையும், காரைக்குறிச்சி ஊராட்சியில் கிழக்குட்டை மாரியம்மன் கோவில் வடக்கு தெருவில் ரூ.2 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டதையும் கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார்.

உணவுக்கூட கட்டிடம்

அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி பணிகள் தரமாக நடைபெற்று உள்ளதா? என அவர் ஆய்வு செய்தார். பின்னர் எடையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் மதிய உணவுக்கூடம் அமைக்கும் பணியையும், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள மதிய உணவின் தரத்தையும் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். மேலும் எடையப்பட்டி குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்ட கலெக்டர், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக், தனம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story