நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறை உள்ளது. அங்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 4 ஆயிரத்து 216 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2 ஆயிரத்து 622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் 970 கருவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 806 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையை நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
போலீஸ் பாதுகாப்பு
அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அவர் பார்வையிட்டார். மேலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.