அருங்காட்சியகத்துறை ஆணையர் நேரில் ஆய்வு
கீழடி அருங்காட்சியகத்தை அருங்காட்சியகத்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். மார்ச் 6-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளங்களிலும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்கள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழடி தோன்றிய வரலாறு குறித்து சிறிய திரையரங்கம் போல் அமைக்கப்பட்டு சுமார் 50 பேர் வரை அமர்ந்து குளிர்சாதன வசதியுடன் கீழடி வரலாறு, அகழ்வாராய்ச்சிகள் பற்றி சுமார் 15 நிமிடங்கள் திரையில் பார்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று அருங்காட்சியகத்துறை ஆணையர் சுகந்தி ஐ.ஏ.எஸ். கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருங்காட்சியகத்துறை ஆணையரை கீழடி அகழ்வாராய்ச்சி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ் வரவேற்றார். பின்பு அருங்காட்சியகத்தை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து விவரங்கள் கேட்டறிந்தார். அதன் பின்பு 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். ஆணையரிடம் தொல்லியல் துறை அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்கள்.