திருத்தணி முருகன் கோவிலில் அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு


திருத்தணி முருகன் கோவிலில் அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு
x

திருத்தணி முருகன் கோவிலில் இந்து அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், அறநிலைத்துறை செயலாளர் மணிவாசகம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் போற்றப்படும் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சீபுரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருத்தணி முருகன் கோவிலை தரம் உயர்த்த பல்வேறு வசதிகள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்து அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன், அறநிலைத்துறை செயலாளர் மணிவாசகம் ஆகியோர் திருத்தணி முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மலைக்கோவிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரம், வெள்ளித் தேர் பணிகள், ராஜகோபுரத்திலிருந்து மாடவீதி இணைக்கும் படிகள் ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அறநிலைத்துறை செயலாளர் மணிவாசகம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக இந்து அறநிலைத் துறை சார்பில் பெருந்திட்ட அறிக்கை தயார் செய்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தங்குமிடங்கள், குடிநீர், கழிப்பிடம், மாட வீதிகள் விரிவுப்படுத்தும் பணி, மாற்று மலைப் பாதை உட்பட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான திருவாலங்காடு வடரானேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தனர். அப்போது அறநிலைத்துறை ஆணையரிடம் முருகன்கோவில் பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு அரசு கொண்டு வந்த 7-வது ஊதிய உயர்வு திட்டத்தை திருத்தணி முருகன் கோவில் பணியாளர்களுக்கு அமல்படுத்த கோரி மனு அளித்தனர்.


Next Story