ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

சேலம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பொது மக்களின் மனுக்களுக்கு உரிய தீர்வுகாண அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்..

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப்பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்கிறார். அந்த வகையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து கடந்த 1-ந் தேதி வேலூர் மாவட்டத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் சென்றார். அங்கு ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கோரிக்கை மனு கொடுத்தனர்

இந்த ஆய்வின்போது, முதியோர் ஓய்வூதியம் எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, நிலுவையில் உள்ள முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் விவரங்கள், இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்ட விவரங்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து, அலுவலக வருகை பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

தீர்வு காணப்படும்

மேலும், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டியும் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனுக்களுக்கு உரிய முறையில் விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி கமிஷனர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கலந்துரையாடல்

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் தொழில் துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள் சங்கம், ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் உரையாடினார்.

மேலும், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சங்கம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம், மலையகப் பகுதி பழங்குடி மக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

அந்த திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்றுவரும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் திறன் பயிற்சிகள் பெற்ற அனுபவத்தையும், அவை அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பது குறித்தும் முதல்-அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

உலகத் தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்த நான் முதல்வன் திட்டம், கல்வி பயிலும் பருவத்திலேயே பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது குறித்தும் விவரித்தனர்.

இந்த சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை அந்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story