போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கேமரா மூலம் ஆய்வு


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கேமரா மூலம் ஆய்வு
x

திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் போலீசாரை நியமிக்க இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

சிறப்பு பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தினத்தந்திக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

பாராட்டு

சென்னையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள், சாலை விபத்துகள் குறைந்து இருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சில இடங்களில் சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சாராயம், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் வருவதை தடுக்க சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டிரோன் கேமரா மூலம் ஆய்வு

மாதக்கடப்பா மலைப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு எப்போதும் காவலர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முன்னிலையில் உள்ளது.

திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் போக்குவரத்தை டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்து உள்ளோம். அந்த பதிவுகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து எதற்காக அங்கு நெரிசல் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் எங்கெல்லாம் போக்குவரத்து சிக்னல் தேவைப்படுகிறதோ அங்கு சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் போலீசார்

ஆம்பூரில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வரவும் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஏலகிரி மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மோப்ப நாய்கள் பிரிவு கேட்டு உள்ளோம்.

முதல்-அமைச்சர் கூறியபடி திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்கவும், அமைதியான மாவட்டம் என பெயர் எடுக்கவும் அனைத்து போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story