தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஓமலூர் மற்றும் கருப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மரம் வெட்டும் தொழில், விவசாயம் நடைபெறும் இடங்கள் மற்றும் ஊதுவர்த்தி தயாரிக்கும் இடங்களில் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் வளரிளம் பருவத்தினர் யாராவது பணியில் ஈடுபட்டுள்ளனாரா? என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது கொத்தடிமை தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி கூறியதாவது:-
தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தினால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது கோர்ட்டு நடவடிக்கைகள் மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பகுதியிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.மீறி பணியமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.