வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளருமான லால்வேனா மற்றும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் அலுவலர்களுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். இக்கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், அதற்கு தேவையான நிதிநிலைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக, திருப்புவனம் பேரூராட்சியில் அம்ருட் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலை சீரமைப்பு பணிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாதிரி ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் கோனார்பட்டி முதல் மணப்பட்டி வரை சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
தொடர்ந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, ஆய்வகம், சலவை எந்திர பிரிவு, கழிவறைகள், உணவுக்கூடம், மருத்துவமனையில் ஒவ்வொரு தளத்திலும் நிறுவப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளின் பயன்கள் தொடர்பாகவும், ஒக்கூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி, பாகனேரி அரசு மருத்துவமனை செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உடனிருந்தனர்.