உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sep 2022 8:00 PM GMT (Updated: 30 Sep 2022 8:01 PM GMT)

சேலத்தில் சினிமா தியேட்டரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சேலம்

சேலத்தில் சினிமா தியேட்டரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தரமற்ற உணவு பொருட்கள்

சேலம் மாவட்டத்தில் ஓட்டல்கள், உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் குளிர்பானம் உள்ளிட்ட பல தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவலிங்கம் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு சென்றனர். பின்னர் அங்கு விற்பைனக்கு வைக்கப்பட்டிருந்த கேக், ரொட்டி, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், பால் மற்றும் பல்வேறு தின்பண்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

குளிர்பான பாட்டில்கள்

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறும் போது, சோதனை நடத்தப்பட்ட சினிமா தியேட்டரில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சோதனை நடத்தியதில், ஒரு சில குளிர்பான பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதிகள் குறிப்பிட வில்லை. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

அதேபோன்று உணவு பொருட்கள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பாலும் தரமற்றதாக இருந்தது. அதையும் பறிமுதல் செய்து உள்ளோம் என்று கூறினர். சினிமா தியேட்டரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story