தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு
x

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை,

மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த புகார் வந்தால் இந்த ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறது. அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று ஆய்வு செய்தனர். பள்ளியில் உள்ள விடுதிக்கு சென்று, விடுதி சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அங்கு தங்கி படித்து வரும் 50 மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறிய ஆணைய தலைவர், தமிழகம் முழுவதும் விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படும் என்ற தகவலையும் கூறினார். தவறு செய்யும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும் ஆணைய தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.


Next Story