தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் ஆய்வு பணி; கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்


தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் ஆய்வு பணி; கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
x

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் ஆய்வு பணி தொடங்கியது. அதனை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களில் ஆய்வு பணி தொடங்கியது. அதனை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

பள்ளி வாகனங்கள்

தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவ -மாணவிகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து, வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக வேன், பஸ் போன்றவற்றை இயக்குகிறார்கள். இந்த வாகனங்கள் தகுதியாக உள்ளதா? என்பதை ஆண்டுதோறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு நேற்று நடைபெற்றது. இதற்காக நெல்லை பகுதியில் உள்ள பள்ளிக்கூட வாகனங்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டன.

தீவிர ஆய்வு

அங்கு ஆய்வு பணியை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். மேலும் வாகனங்களில் ஏறி அவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா, முதல் உதவி பெட்டி, வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசர காலங்களில் தீயணைப்பு கருவி ஆகியவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து 108 மருத்துவக் குழுவின் மூலம், அவசர கால சிகிச்சை பற்றியும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்தும், பள்ளிக்கூட வாகன டிரைவர், உதவியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

வாகனங்களுக்கு அனுமதி

தமிழக அரசு உத்தரவுப்படி தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 135 தனியார் பள்ளிகளில் 511 வாகனங்கள் உள்ளன. அதில் 280 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. மீதி உள்ள வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்யப்படும்.

தற்போதைய ஆய்வில் தகுதி வாய்ந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. குறைபாடு உள்ள வாகனங்களில், அதை சரிசெய்த பிறகு, மீண்டும் ஆய்வு செய்து பாதுகாப்பு உறுதி செய்த பிறகே அனுமதி வழங்கப்படும்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும். இதுதொடர்பாக வருகிற 29-ந்தேதி ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பள்ளி கட்டிடங்கள்

அரசு பள்ளி கட்டிடங்கள் உறுதியாக இருக்கிறதா? என்று அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையும் பார்வையிட்டு, பழுதடைந்த, மோசமான கட்டிடங்கள் இருந்தால் அதனை உடனே சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் வரவழைக்கப்ட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆய்வு பணியில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமாவதி, சுப்புலட்சுமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜசேகர், பெருமாள், பிரபாகரன், தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story